ஆயுதம் அணிகலனாம் ,
அதிகாரம் கேடயமாம் !
வன்முறைக்கு வாழ்வளித்து ,
வழிய உயிர்பறிக்கும் ,
உன்மத்தர் வாழுகின்ற
ஊனமுற்ற தேசமடா !
நெற்றி வியர்வைதனை 
நிலத்திலே சொட்டியவன்,
உழைத்த பணத்தினிலே
ஒருகவளம்  உண்ணும்  முன்னே  ,
தட்டிப்  பறித்திடுவார் ,
தறுதலை  கூட்டமடா !
பாவப் பணம்   பறிக்க
பாலகர் தமை கடத்தி ,
பேரங்கள்  மிகப் பேசும்
பேடிகள்  நிறைந்துவிட்ட ,
கோரப் பிடிக்குள்ளே
குமுறுகிற தேசமடா !
காவி   உடை யணிந்து
கடவுளை  சாட்சி வைத்து ,
காமப் பசி   போக்க 
கன்னியரை சீரழிக்கும் ,
புண்ணியர்கள்  வாழுகின்ற
போக்கற்ற   தேசமடா !
கூறுகெட்ட  மக்களிடம்
கேடுகெட்ட பொருளை விற்க ,
நூறு கட்ட  விளம்பரமும் ,
பேருக்கொரு  இலவசமும்  , அதில் 
ஈறில்லை, பேனில்லை  என்றுசொல்லி
எக்கச்சக்க   கொல்லையடா !
முந்தாநாள்    வந்தவர்கள்  
முகவரி     அற்றவர்கள்  , 
முச்சந்தியில்  நின்றுகொண்டு
முழக்கங்கள்  இட்டவர்கள் ,  
சாதிக்கொடி    பிடித்து ,
சமூகம்    சீரலிப்பாரடா ! 
ஆரம்பக்  கல்வியிலே 
அரங்கேறும் அகுதக் கொள்ளை , 
உயர்  கல்விச் சாலையிலே
உச்சம்  பெற்று  போனதடா !
கொட்டிக்   கொடுத்துவிட்டு ,
பட்டம்வரை   படித்துவிட்டு ,
தட்டித்   தடுமாறி  
தள்ளாடி வரும்போது ,
குட்டிச்சுவரோரம்
கூடி நிற்கும் நண்பரடா  !
சொந்த   நாட்டினிலே ,
சுதந்திரமாய்  ரோட்டினிலே , 
வேலை தேடும் வேலையினை
ஒரு வேலையாய்   செய்யு கிற ,  
வேலையில்லா வாலிபர்கள்
வேதனையில் வெட்டிவைத்த ,
                     இது
கல்வெட்டு காட்சியடா  இந்த
கல்வெட்டை திறந்து வைத்த ,
பிறைத்தமிழன் சாட்சியடா !!!
========================================================================
         இவன்   >::    பிறைத்தமிழன் 




