மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 13 ஜனவரி, 2017

"வறட்சிப் பொங்கல்"

          "காளைதழுவி முத்தமிட"
ஏழை விவசாயி
எத்தனை நாளைக்கு
எலிக்கறி திண்பான் ?

கூன்விழுந்து குடல் சிறுத்து வறுமை
குப்புறத் தள்ளிய போதும்
நான் உழுது   தான் விதைத்து
நானிலம் வாழ
அறுவடை செய்தான்

காலமெல்லாம் கிடைப்பது
பட்டுத்துணியா? இல்லை
பகட்டுடைய வாழ்வா ?
கழனி நீரும் கால்வயிற்று கூழும்,
ஓலைக் குடிலும்
ஒட்டுக்கோமணமும் தானே ,

இது   போதுமே !  என
பெருமூச்சு விட்ட
விவசாயி   இப்போது
கை சேதமே ! என
கண்ணீர் வடிக்கிறான்  ஏன் ?

டிஜிட்டல்  கணவான்களும்,
ஒற்றைவிரலில்
உலகப் பொருளாதாரம்  பேசுவோரும்
கண்களில்  என்ன
கருப்புத்துணியா கட்டியுள்ளனர் ?

இந்திய தேசத்தின்
இதயத்துடிப்புக்கள் எங்கள் [விவசாயி ]
மாநிலம்தோறும்
மாண்டுபோனால்  மண்  நிலமெங்கும்
மலடாய்ப் போகுமே

சோலையாய் விளைவித்த நம்
சொர்க்க பூமி   வறண்டு
பாலையாய் போனபின்னும் என்
காளையைத் தழுவி கட்டியனைத்து
முத்தமிடத்தான்ஆசையாய்......
   ~~~~~{ஜல்லிக்கட்டு}~~~~~~

பீட்டா என்னும் பித்துப் பிடித்த
பிசாசுக்கூட்டமே  நீங்கள்
உண்ணும் உணவை
ஊட்டி வளர்க்க உழவு செய்தவை யாதென தெரியாதா ?

காட்டு மிருகமும்
காளைக்கூட்டமும் ஒன்றா ?

கனிம வளங்களை
களவாடிய கூட்டமே
கணினி கலாச்சாரம் கடவுளாகிபோனால்
இயற்க்கைதனை
எட்டி உதைப்பீரோ ?

வானமும் வஞ்சிக்க,
வழியேது கஞ்சிக்கே !

சட்டத்தின் ஓட்டைக்குள்ளே
சட்டைத்துணிகளை
சலவையிட்டு வெளுப்பவர்கள்
பொய் வாக்குறுதி விதைத்து
நிஜ வாக்கு அறுவடைக்கு
பணநாயகம் செய்கின்ற
அரசியல் அயோக்கியர்கள்

அரிச்சுவடி தெரியாமல்
அரியணை  ஏரியபின்
அதிகாரச் சண்டையில்
ஆண்டவனை மறந்தவர்கள்,
விவசாய மக்களை வேதனையில் தள்ளி
உழவுத்தொழிலை ஒழித்துக்கட்ட
ஓரணியில் திரண்டவர்கள் யாரென

இனங்கண்டு இடித்துறைப்போம்
இரும்புத் தடம் பதித்து
எழுந்து வருக  என்
இன்பத் தமிழினத்தின்
இனமானச் சிங்கங்களே

உதடுகள் சிரிப்பது பேருக்கு,
நம் உள்ளங்கள் அழுவதோ
தமிழ்நாட்டு உழவர்களின் "சாவுக்கு"
இனிவரும் சந்ததிக்கு
எடுத்துச்சொல்லும் முகமாக
வலிய கொண்டாடுவோம் வலி நிறைந்த
வறட்சிப் பொங்கலை !!!!!!!!!!
==================================
                 இவன்; பிறைத்தமிழன்.